Court functioning on holiday specially for common man

 சாமானியருக்காக மட்டும் ஒரு நாள் இயங்கிய நீதிமன்றம் 


#சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஒரு விவசாய கிராமத்தில், ஒரு சோலார் தொழிற்சாலை தனது சுய லாபத்துக்காக விவசாய நிலங்களை அழித்து, நீர்நிலை அமைப்புகளை அழித்து, கண்மாயை ஆக்கிரமிப்பு செய்து எந்த அனுமதியும் இல்லாமல் ஒரு சாலை அமைக்கிறார்கள். அதனை விரும்பாத கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. தங்கள் கண்மாயை அழிப்பதை விரும்பாத மக்கள் சட்ட விரோதமாக போடப்பட்ட சாலையை துண்டிக்கிறார்கள். உடனே கார்ப்பரேட் சோலார் நிறுவனம் போலீசை அனுப்பி கிராம மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தார்கள். 


கைது செய்யப்பட்ட கிராம மக்களை ஜாமீனில் வெளியே எடுக்கும் மக்களின் முயற்சியும் போலீசின் கடும் ஆட்சேபனை காரணமாக சிவகங்கை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தோல்வியில் முடிந்தது. அப்போது கிராம மக்கள் சார்பாக கண்மாயில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நிதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு கடந்த 09.10.2026 அன்று உயர்நிதிமன்ற water body bench என அழைக்கப்படும் நீதியரசர்கள் G.R.சுவாமிநாதன் மற்றும் B.புகழேந்தி அவர்கள் முன்பு பட்டியலிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதியரசர்கள் யாராக இருந்தாலும் கண்மாயை ஆக்கிரமிக்க கூடாது, கிராம மக்கள் சட்டத்தை கையில் எடுத்தது சரி என்று சொல்ல முடியாவிட்டாலும் அவர்கள் அகற்றியது சட்டவிரோதமாக போடப்பட்ட சாலையை தான் என்று கூறி, அதற்காக காவல்துறை கார்ப்பரேட் நிறுவன வேலையாட்கள் போல் செயல்பட்டு விவசாயிகளை கைது செய்தது சகிக்க முடியாத தவறு என்பதை சுட்டிக்காட்டி, விவசாயிகளை பிணையில் விட சிவகங்கை செஷன்ஸ் நீதிமன்றம் 10.10.2026 (சனிக்கிழமை - நீதிமன்ற விடுமுறை ) சிறப்பு அமர்வாக அமர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்கள். அதன்படி கடந்த சனிக்கிழமை கிராம விவசாயிகள் சிவகங்கை நீதிமன்றம் மூலம் தங்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள். மேற்படி வழக்கில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பாக வாதிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் பல முக்கிய புள்ளிகளுக்காக சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கிய வரலாறு பல உண்டு. ஆனால் சாதாரண கிராம மக்களை சிறையில் இருந்து விடுவிக்க ஒரு மாவட்ட நீதிமன்றம் விடுமுறை தினத்தில் இயங்கியது  இதுவே முதல் முறை. 



Post a Comment

0 Comments